Saturday, January 9, 2016

அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடத்துக்கு ஜன.25-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் ஜன.25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் 75 சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் 29 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. காலிப் பணியிடங்களுக்கான இன சுழற்சி சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சத்துணவு அமைப்பாளர் பணியிடத்துக்கு பொதுப் பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர்கள் 10ஆம் வகுப்பும், பழங்குடியினர் 8ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமையல் உதவியாளர் பணிக்கு 5ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்திருக்க வேண்டும். பழங்குடியினருக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.2016, ஜன.1-ம் தேதியன்று பொதுப் பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர் 21 முதல் 40 வயதுக்கும், பழங்குடியினர் 18 முதல் 40 வயதுக்கும் உள்பட்டு இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதுக்குள்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் நியமன பணியிடத்துக்கு 3 கி.மீ. தூரத்துக்குள்பட்ட பகுதியில் குடியிருப்பவராகவும், மைய கணக்குகளை பராமரிக்கும் தகுதியுள்ளவராகவும் இருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் தங்களது கல்வித் தகுதி, இருப்பிடம், ஜாதி, முன்னுரிமைச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை இணைத்து ஜன. 25 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment