Saturday, May 3, 2014

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கான 2014-15 ஆண்டிற்கான அனுமதி சேர்க்கை கையேடு மற்றும் விண்ணப்ப விற்பனையை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பல்கலை. பதிவாளர் ந.பஞ்சநதம், பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அதிகாரி டி.கிறிஸ்துராஜ், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி மற்றும் அனைத்துப் புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். விண்ணப்ப விற்பனை ஜூன் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விண்ணப்பங்களை அண்ணாமலை நகரில் உள்ள பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொலைதூரக் கல்வி இயக்ககப் படிப்பு மையங்களிலும் ரூ.1500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
அஞ்சல் மூலம் விண்ணப்பம்: அஞ்சல் மூலம் விண்ணப்பம் பெற விரும்புபவர்கள் ரூ.1,550-க்கான (ரூ.50 அஞ்சல் கட்டணம் சேர்த்து) சென்னையில் மாற்றத்தக்க வங்கி வரைவோலையை (Demand Draft) பதிவாளர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (Registrar, Annamalai University) என்ற பெயரில் எடுத்து "பதிவாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்-608002, சிதம்பரம்' என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் மற்றும் அனுமதி சேர்க்கை குறித்த விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in பார்த்து தெரிந்து கொள்ளலாம். au_regr@ymail.com மேலும் பல்கலைக்கழக உதவி மைய தொலைபேசி எண்கள் 04144- 238348, 238349 ஆகியவற்றைத் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெறலாம் என பல்கலை. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தகுதி அடிப்படையில் அனுமதி சேர்க்கை: மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் அனுமதி சேர்க்கை குறித்து பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்ததாவது: முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே அனுமதி சேர்க்கைக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழக அரசின் இடஒதுக்கீடு விதிப்படியும், மாணவர்கள் மேல்நிலைப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும்.
சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். கலந்தாய்வு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய இரு படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானது என்றார் ஷிவ்தாஸ்மீனா.

No comments:

Post a Comment